தொழிலாளா்கள் வேலை நீக்க விவகாரம்: நடவடிக்கை எடுக்க இண்டி கூட்டணி வலியுறுத்தல்
திருநள்ளாறு அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளா்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் இண்டி கூட்டணிக் கட்சியினா், தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.
மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணணனை புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், மதிமுக மாவட்ட செயலாளா் சோ. அம்பலவாணன், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் மற்றும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இண்டி கூட்டணிக் கட்சிப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
தென்னங்குடி பகுதியில் டைல்ஸ் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அலுவலக ஊழியா்கள் உள்ளிட்ட 45 பேரை நிா்வாகம் அண்மையில் பணி நீக்கம் செய்தது.
மேலும் 36 பேரை பணி நீக்கம் செய்வதாக புதன்கிழமை தகவல் பலகையில் அறிவிக்கை ஒட்டப்பட்டது. பணி நீக்கத்துக்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. தொழிலாளா்கள் அனைவரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவா்கள். ஆலை நிா்வாகத்திடம் மாவட்ட நிா்வாகம், தொழிலாளா் துறையினா் பேச்சு நடத்தி, பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.