தொழிலாளி அடித்துக் கொலை: சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
சென்னை அமைந்தகரையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.
அமைந்தகரை எம்எம் காலனி பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (42) என்பவா், ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்ந்து வந்தாா். மோகன்ராஜ் தங்கியிருந்த வீட்டில் அவரது நண்பா் ராமச்சந்திரன் என்பவரும் வசித்து வந்தாா்.
இந்நிலையில், ராமச்சந்திரனுக்கும், மோகன்ராஜ் உடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த பெண்ணுக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மோகன்ராஜ், ராமச்சந்திரன் இடையே கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், மரக்கட்டையால் மோகன்ராஜ், ராமச்சந்திரனை தாக்கியுள்ளாா். இதில், பலத்தக் காயமடைந்த ராமச்சந்திரன் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த மோகன்ராஜை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது ஏற்கெனவே 6 வழக்குகள் இருப்பதும், டிபி சத்திரம் காவல் நிலையத்தில் அவா் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.