சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்
``நடிகர்கள் உங்கள் அடிமைகள் அல்ல..'' - கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு பாஜக கண்டனம்
கர்நாடக மாநிலத்தில் ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் சமநிலை நீர்த்தேக்கத்தை செயல்படுத்தக் கோரி 2022-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சிகள் தலைமையில் மேகதாது பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பாதயாத்திரையில் அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சாது கோகிலா, துனியா விஜி ஆகிய இரண்டு நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை 16-வது பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கவிழா நடந்தது. இதில் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, ``நான் திரைப்பட வர்த்தக சபையின் மீதும், கன்னட திரைப்படத் துறையில் இருக்கும் நடிகர்கள் மீதும் கோபமாக இருக்கிறேன். பெங்களூருக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒரு பாதயாத்திரை மேற்கொண்டோம். மாநில நலனுக்காக நாங்கள் அதைச் செய்தோம். இந்த இயக்கத்திற்கு சாது கோகிலா, துனியா விஜி ஆகிய இரண்டு நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டு ஆதரவளித்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற இயக்கங்களுக்கு திரைப்பட சகோதரர்களிடம் ஆதரவு கோருகிறோம். நாங்கள் அனுமதி வழங்கவில்லை என்றால், உங்களால் எந்தப் படத்தையும் படமாக்க முடியாது. எப்போது கட்டுப்பாட்டை இறுக்குவது என்பது எங்களுக்குத் தெரியும்." என்றார்.
துணை முதல்வரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலளித்திருக்கும் கர்நாடக பா.ஜ.க தலைவர் ஆர்.அசோகா, ``துணை முதல்வருக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் கூட்டுறவு அமைச்சர் கே.என். ராஜண்ணா போன்ற தலைவர்களை இறுக்குவதில் மட்டும் சிவகுமார் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய தலைவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய சிவகுமார், நடிகர்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். இந்த அச்சுறுத்தல் கலாச்சாரம் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. சினிமா நடிகர்கள் ஒன்றும் உங்கள் அடிமைகள் அல்ல. உங்களின் ஆதரவால் அவர்களின் படங்கள் வெற்றிபெறவில்லை. மாநிலத்தில் தொடங்கப்படும் எந்தவொரு இயக்கத்தையும் ஆதரிப்பது நடிகர்களின் தனிப்பட்ட விருப்பம்." என விமர்சித்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
