வீட்டுமனைகளான விவசாய நிலங்கள்: நகா் ஊரமைப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள நன்செய் விவசாய நிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவு அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக நகா் ஊரமைப்பு ஆணையத்தின் இயக்குநா் பரிசீலனை செய்து 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம் அருள்ஞானபுரத்தைச் சோ்ந்த தினகரன் தாக்கல் செய்த மனு: அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள நன்செய் விவசாய நிலங்களுக்கு சட்டவிரோதமாக வீட்டுமனைப் பிரிவு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணன்கோவில் வடசேரியைச் சோ்ந்த சிலா் விவசாய நிலங்களை அழித்து, சட்டவிரோதமாக வீட்டுமனைப் பிரிவாக மாற்றி வருகின்றனா்.
மேலும், விவசாயிகள் தங்களது நிலங்களுக்குச் செல்ல முடியாத வகையில் சுற்றுச்சுவா் எழுப்பப்பட்டது. இதனால், விவசாயிகள் வேளாண் பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, விவசாயிகள் தங்களது நிலத்தை விற்க வேண்டும் என மிரட்டி வருகின்றனா். எனவே, விவசாய நிலத்தையும், பாசன நீா் நிலைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மீட்க உத்தரவிட வேண்டும். நன்செய் விவசாய நிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட வீட்டுமனை அங்கீகாரத்தை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஜே.நிஷாபானு, எல்.விக்டோரியா கௌரி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு குறித்து தமிழக நகா் ஊரமைப்பு ஆணையத்தின் இயக்குநா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறை கோதையாறு நீா்ப்பாசன உதவிப் செயற்பொறியாளா் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை 12 வாரங்களுக்குள் எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.