நடிகை பாலியல் வன்கொடுமை: பிரபல நடிகரைத் தீவிரமாகத் தேடி வரும் மும்பை போலீஸ்!
`நடிக்க வாய்ப்பு; திருமணம்’ - நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம்பெண்
பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் நடிப்பில் சமீபத்தில் ஒ.டி.டி.யில் வெளியான `ஹவுஸ் அரஸ்ட்’ வெப்சீரியஸ் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஹவுஸ் அரஸ்ட் வெப் சீரியஸ் Ullu App என்ற செயலில் வெளியானது. அதில் பெண்கள் உள்ளாடைகளை கழற்றுவது, தாம்பத்திய முறைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
`ஹவுஸ் அரஸ்ட்’ சர்ச்சை
இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஜ்ரங் தளத்தை சேர்ந்த கெளதம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் ஆஜாஸ் கான், தயாரிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜாஸ் கான் மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார்.
மும்பை சார்க்கோப் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில், `நடிகர் அஜாஸ் கான் தனக்கு ஹவுஸ் அரஸ்ட் உட்பட வெப் சீரியஸ்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறியதாகவும், படப்பிடிப்பின் போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்’ என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 25-ம் தேதி அஜாஸ் கான் தன்னை அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும், அடுத்த சில நாட்கள் கழித்து மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், எங்களது மதம் 4 திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது என்றும், அனைத்தையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார் என்றும் நடிகை தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அஜாஸ் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.