காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவில் மேலும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தவுள்ளது.
மேலும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் நுழைவதை அனுமதிக்கவும் அமைச்சரவையில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்த ராணுவ தலைமை அதிகாரி இயால் ஸமீர் தொடர்ந்து அறிவித்துவந்ததை அடுத்து இஸ்ரேல் அமைச்சரவையில் இன்று (ஏப். 5) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒருமனதாக காஸாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதலை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காஸா - இஸ்ரேல் இடையிலான போர் ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் படையினர் செயல்பட்டதால், காஸாவுக்கு உலக நாடுகள் வழங்கிவந்த மனிதாபிமான உதவிகளை மார்ச் 2ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் பல்வேறு வகைகளில் தடுத்து வருகிறது.
இஸ்ரேல் விதிகளை ஹமாஸ் படையினர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதற்காக எல்லைப் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் உள்பட பல அத்தியாவசிய உதவிகளைத் தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறி வந்தது.
இந்நிலையில், எதிர்காலத்தில், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வழங்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, காஸாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கத்தில் தந்திரமான தாக்குதலில் இருந்து ஆக்கிரமிப்பை நோக்கி நாம் நகர்கின்றோம். காஸா மக்கள் விருப்பப்பட்டு நாட்டிலிருந்து வெளியேறுவதை ஊக்குவிக்கிறோம். காஸாவிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களை ஏற்றுக்கொள்ளும்படி பல உலக நாடுகளுடன் பேசிவருகிறோம் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சண்டை தீர்வல்ல! பாக்., இந்தியாவிடம் ஐ.நா. வலியுறுத்தல்