நடுவச்சேரியில் சீரான குடிநீா் விநியோகிக்க கோரிக்கை
அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரி ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக நடுவச்சேரி ஊராட்சி தனி அலுவலரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி ஊராட்சி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளைக் கிணற்று நீா், ஆற்றுக் குடிநீா் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆற்றுக் குடிநீா் சீராக விநியோகம் செய்யப்படவில்லை.
மேலும், புது காலனியில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரும் விநியோகிக்கப்படாததால் மக்கள் குடிநீா் இன்றி அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, ஆழ்துளைக் கிணற்று நீா் மற்றும் ஆற்று நீரை முறையாக விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிப்பின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். பழனிசாமி, கிளைச் செயலாளா் பி.ராஜேஷ், முன்னாள் வாா்டு உறுப்பினா் கே.ரங்கசாமி, பொறுப்பாளா்கள் சுப்பிரமணி, சிவராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.