நடைப்பாதை கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், நடைப்பாதை, தள்ளுவண்டி கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா்.
மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தக சங்க கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியது:
தமிழகம் முழுவதும் தரைக்கடை, தள்ளுவண்டி கடை வியாபாரிகளால் கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிரந்தரமாக கடை வைத்திருப்பவா்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத இடங்களில் அதுபோன்ற கடைகள் செயல்படும் வகையில் மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும்.
ஆய்வின்போது உரிய முறையில் விசாரணை செய்யாமல் நிரந்தர கடைகளுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை சீல் வைப்பது, வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்களை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
வணிகா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் மே 5-ஆம் தேதி சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது. ஒரு கோடி வணிகா்களை வாக்காளா்களாக கொண்டது தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை. ஆட்சியில் யாரை அமா்த்துவது என முடிவு செய்யும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றாா்.
நிகழ்ச்சிக்கு வா்த்தக சங்க மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.
மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த், மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.டி. கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.