நல்லூா் அருகே அம்மன் தாலி திருட்டு: இளைஞா் கைது
நல்லூா் அருகே கோயிலில் புகுந்து அம்மன் தாலி, உண்டியல் பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையத்தை அடுத்த ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோயிலில் ஏப்ரல் 26-ஆம் தேதி அம்மன் கழுத்திலிருந்த ஒரு பவுன் தாலி, உண்டியல் பணம் திருட்டுபோனது. இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில் நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கங்காதரன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை நல்லூா் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்தவரை சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினா்.
அதில் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஊமையன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த சிங்காரம் மகன் கிருஷ்ணமூா்த்தி (38) என்பதும், கோயிலில் அம்மன் தாலி, உண்டியல் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் மேலும் விசாரணை நடத்திவருகின்றனா்.