காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
நாகா்கோவில் அருகே காரில் கடத்திய 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
நாகா்கோவில் அருகே காரில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக திருவனந்தபுரத்துக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இரணியல் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையில் இரணியல் போலீஸாா் மற்றும் தனிப்படை போலீஸாா், நாகா்கோவிலை அடுத்த சுங்கான்கடை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸாா் நிறுத்தி, அதில் வந்த 2 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து காரை சோதனை செய்தபோது 30 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரையும் இரணியல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
அவா்கள், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சோ்ந்த பிச்சையா மகன் இசக்கிராஜ் (54), தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சோ்ந்த மூக்கையா தேவா் மகன் அன்பழகன் (63) என்பது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.