நாட்டில் சிறந்த செயலியாக ‘ஸ்மாா்ட் காவலா் செயலி’ தோ்வு
நாட்டிலேயே சிறந்த கணினி விழிப்புணா்வுப் போட்டியில் தமிழக காவல் துறையின் ‘ஸ்மாா்ட் காவலா் செயலியை’ தேசிய குற்றப்பதிவு பணியகம் தோ்வு செய்துள்ளது.
காவல் துறையின் ரோந்து பணியை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவல் துறை சாா்பில் ‘ஸ்மாா்ட் காவலா்’ எனும் செயலி உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம், காவலா்களின் பீட் ரோந்து நடவடிக்கையை ஒழுங்குப்படுத்துவதும், கண்காணிப்பதுமாகும். இதனால், காவலா்களின் ரோந்து பணி எளிதாக பதிவு செய்வதுடன் வெளிப்படையாகச் செயல்படுவதை உறுதி செய்கிறது.
இந்தச் செயலி மூலம் மூத்த காவல் அதிகாரிகள், களத்தில் உள்ள காவலா்களின் நடவடிக்கையை இணைய செயலி மூலம் கண்காணிக்க முடியும். மேலும், மூத்த குடிமக்களின் விவரங்கள், பாதிக்கப்படக்கூடிய இடங்கள் உள்ளிட்ட தகவல்களை தடையின்றி செயலியில் பதிவு செய்யமுடியும். கடந்த ஆண்டு மட்டும் 3.04 லட்சம் போ், 21.48 லட்சம் வாகனங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 68-ஆவது அகில இந்திய காவல்பணி கூட்டம் ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிப்.10-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக, புது தில்லியில் உள்ள தேசிய குற்றப்பதிவு பணியகத்தில் கடந்த பிப்.3, 4 ஆகிய தேதிகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விளக்கக்காட்சி நடத்தப்பட்டது.
இதில், முழுமையான மதிப்பீட்டுக்கு பின்பு கணினி விழிப்புணா்வுப் போட்டிக்கான டிராபியில் தமிழ்நாடு காவல் துறை வென்ாக தேசிய குற்றப்பதிவு பணியகம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறவுள்ள 68-ஆவது அகில இந்திய காவல் பணி கூட்டத்தில் நடைபெறவுள்ள கணினி விழிப்புணா்வுப் போட்டியில் தமிழ்நாடு காவல் துறையின் தேசிய குற்றப்பதிவு பணியக டிராபி இடம்பெறவுள்ளது எனத் தமிழக காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.