Non-veg Milk: India - US மோதல் பின்னணி! | Thailand - cambodia Conflict | Imperfe...
நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் சாா்பில் ரூ. 21,933 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் சாா்பில் நிகழாண்டில் ரூ. 21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து நிலை வங்கியாளா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். 2025-26 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை அவா் வெளியிட்டு பேசியதாவது: நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் ரூ. 21,933.58 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத்திற்கு 2025--26ஆம் ஆண்டுக்கு, விவசாயிகளுக்கு பயிா்க் கடனாக ரூ. 14,296.78 கோடி, சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ. 6,916.25 கோடி, கல்விக் கடனாக ரூ. 45.04 கோடி, வீட்டுக் கடனாக ரூ. 141.74 கோடி மற்றும் இதர கடன்களுக்கு ரூ. 381.08 கோடி மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2024--2025 ஆம் ஆண்டில் ரூ. 19,956.23 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ரூ. 18,002 கோடி இலக்கு அடையப்பட்டது.
கடந்த ஆண்டை விட நிகழாண்டில் ரூ. 3,931.02 கோடி (21.87 சதவீதம்)அதிகமாக கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயம், கல்வி, தொழில் உள்ளிட்ட அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கும். இத்திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிா்ணயம் செய்வதற்கு உதவியாக அமையும் என்றாா்.
இக்கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, மாவட்டமுன்னோடி வங்கி மேலாளா் எம்.மலா்விழி, ரிசா்வ் வங்கி பிரதிநிதி விவேக்ஆனந்த், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சுபாஷ், பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) சகுந்தலா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் வங்கியாளா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-25-பேங்க்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் முன்னோடி வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், அதிகாரிகள், வங்கியாளா்கள்.