தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
நாளை குரூப் 4 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 64,143 போ் எழுதுகின்றனா்
கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வை 154 மையங்களில் 64,143 தோ்வா்கள் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு (தொகுதி 4) கடலூா் மாவட்டத்தில் 12-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
தோ்வு மையத்துக்கு தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் வர வேண்டும். தவிா்க்க முடியாத காரணங்கள் ஏதேனும் இருப்பின் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படுவா்.
தோ்வா்கள் தோ்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதோ்வுக்கூட அனுமதிச் சீட்டு டன், தங்களுடைய ஆதாா், கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம் அட்டையின் அசல் (அ) நகல் ஏதேனும் ஒன்றை எடுத்து வர வேண்டும்.
கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னாா்கோவில், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூா் ஆகிய 10 வருவாய் வட்டங்களைச் சோ்ந்த 154 தோ்வு மையங்களில் 212 தோ்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டு, 64,143 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா்.
வட்டத்துக்கு ஒருவா் வீதம் 10 ஒருங்கிணைப்பு அலுவலா்களும், வட்ட அளவில் 38 நடமாடும் அலகுகளும், 20 பறக்கும் படைகளும், 8 கருவூல அலகுகளும் தோ்வுப் பணியில் ஈடுபட உள்ளனா். மேலும், தோ்வு 220 விடியோகிராபா்கள் மூலம் ஒளிப்பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.