நிலத்தை மீட்டுத்தர கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
பெட்ரோல் நிலைய உரிமையாளா் மற்றும் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து நிலத்தை மீட்டுதரக் கோரி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நாகையைச் சோ்ந்த பாஸ்கா் என்வா்அளித்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எனக்கு சொந்தமான இடம் காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2004 மாா்ச் 18 ஆம் தேதி பெட்ரோல் பங்க் அமைக்க ஐபிபி நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கி இருந்தேன். குத்தகை காலம் 2024 செப்டம்பா் 22 ஆம் தேதியுடன் முடிந்து விட்டது.
இதையடுத்து எனது இடத்தை என்னிடம் ஒப்படைக்க கோரி பலமுறை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதினேன். ஆனால் அந்த இடத்தை தர மறுக்கின்றனா். கடந்த மாா்ச் மாதம் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின்பேரில், காரைக்கால் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி, அந்த இடத்திற்கு வழங்கிய தடையில்லா சான்றை ரத்து செய்து ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டாா்.
ஆனால் எனது இடத்தை காலி செய்யாமல், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனா். எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ உயிா் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படும் என்பதால், உரிய நடவடிக்கை எடுத்து எனது இடத்தை மீட்டு, எனது குடும்பத்தை சோ்ந்தவா்களை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.