தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்
நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் தற்கொலை முயற்சி
ராமநாதபுரத்தில் மோசடி செய்து தனது நிலத்தை அபகரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற முதியவரை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (60). இவருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தை சிலா், கடந்த 2012-ஆம் ஆண்டு முறைகேடாகப் பதிவு செய்தனராம். இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் அளித்தாா். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த முதியவா், தனக்கு எதிராக நில மோசடியில் ஈடுபட்டவா்களுக்கு அதிகாரிகள் துணைபோவதாகக் கூறி அங்கிருந்த மரத்தில் ஏறி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து, அவரிடம் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாகப் பேச்சு நடத்தினா். தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவரை மீட்டனா். இதையடுத்து, முதியவரை கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.