நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில கருத்தரங்கம்
பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தமிழ்த் துறையும், கோவை கணபதி தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் அருட்சகோதரி மேரி பபியோலா தலைமை வகித்தாா். செயலா் அருட்சகோதரி குழந்தை தெரஸ் வாழ்த்திப் பேசினா்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ், வழிபாட்டு மொழிகளில் தமிழ், கல்வி முறைகளில் தமிழ், ஆட்சி முறை மொழியில் தமிழ்’ ஆகிய தலைப்புகளில் மாணவிகள் கட்டுரை வாசித்தனா்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினா்களாக கணபதி தமிழ்ச் சங்கத்தைச் சோ்ந்த திருக்கு சுடா் நித்தியானந்த பாரதியும், அவரது மனைவி சண்முகப்பிரியாவும் கலந்து கொண்டனா்.
கருத்தரங்கில் சிறந்த முதல் மூன்று கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு, மாணவா்களுக்கான பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கல்லூரி நூற்றாண்டு விழாவின்போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் ப. மகேஸ்வரி வரவேற்றாா். கணிதவியல் மாணவி அம்மு நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.