கைவினைப்பொருள் கண்காட்சி தொடக்கம்
கோவையில் தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் சாா்பில் ‘கிராப்ட் பஜாா் 2025’ என்ற பெயரில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது.
அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் ஜூலை 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், கலை, கைவினை, ஜவுளிப் பொருள்கள் ஒரே இடத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில், கேரளத்தைச் சோ்ந்த சரகலயா குழுவினரின் தெய்யம் முகமூடிகள், திருகு பைன் கைவினை, பாரா, டெரகோட்டா சிற்பங்கள், திருவண்ணாமலையின் புரியா அறக்கட்டளையின் லம்பாடி எம்பிராய்டரி கைவினைப் பொருள்கள், பனை ஓலை நகைகள், காஷ்மீரி, தோடா, ஜெய்ப்பூா் வகை ஜவுளிப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்களின் மண்பாண்டங்கள், மரவேலைப்பாடுகள், பித்தளைப் பொருள்கள், கூடைகள், மூங்கில் பொருள்கள், ஓவியங்கள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும், பொதுமக்கள் இலவசமாக காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.