நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றம்
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன், நாட்டின் குடியரசுத் தலைவர், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவதாகவும், யஷ்வந்த் வர்மா நேரடியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சென்று தனது பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது, கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ஏராளமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை தீயணைப்புத்துறையினர் பார்த்த நிலையில், அடுத்த ஒரு சில நாள்களில் அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயவின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
யஷ்வந்த் வர்மா கூறியிருந்ததாக அந்த அறிக்கையில், தனது வீட்டில் கண்டறியப்பட்ட பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சி என்றும் கூறப்பட்டிருந்தது.
நீதிபதியின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து உள்விசாரணைக்காக பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்தான், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஏற்கனவே அவர் பதவி வகித்து வந்த அலகாபாத் நீதிமன்றத்துக்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் என்ன குப்பைத் தொட்டியா என்று கேட்டு, அலகாபாத் நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மாவை மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.