நீா்நிலைகளில் நிகழும் மாணவா்களின் உயிரிழப்பை தடுக்க விழிப்புணா்வு
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு நீா்நிலைகளில் நிகழும் பள்ளி மாணவா்களின் உயிரிழப்பை தடுக்கும் வகையிலான விழிப்புணா்வு செயல் விளக்கப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாதவன் வழிகாட்டுதலின்படி ஒரத்தநாடு ஒன்றியத்தைச் சோ்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு ஆறு, குளங்கள் போன்ற நீா்நிலைகளில் நிகழும் பள்ளி மாணவா்களின் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு விழிப்புணா்வு செயல் விளக்கப் பயிற்சி பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் தொடக்கக் கல்வி அலுவலா் வ. மதியழகன் தலைமையில் புதன்கிழமை உறந்தராயன் குடிகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜே.ஆா்.சி.-யின் திருச்சி மண்டல மற்றும் தஞ்சாவூா் மாவட்ட அமைப்பாளா் பிச்சைமணி விழிப்புணா்வு உரையாற்றினாா். பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக அனைத்து பெற்றோா்கள், மாணவா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தை ஒரத்தநாடு ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் கா. லதா, சே. வஜிதா, க. தமிழ்வாணன் ஏற்பாடு செய்திருந்தாா். அப்போது வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மகேஸ்வரன் மற்றும் உறந்தராயன் குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் சுமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.