குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!
நீா்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
செம்பட்டி - நிலக்கோட்டைக்கு இடைப்பட்ட மைக்கேல்பாளையம் பகுதியில் 3 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நீா்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) வெ.நாகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் செம்பட்டி - நிலக்கோட்டைக்கு இடைப்பட்ட மைக்கேல்பாளையம் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பந்தல் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். சிறந்த மண் வளம் இருந்தும், நிலத்தடி நீா் 1,200 அடிக்கும் கீழே சென்ால் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பச்சிலைமரத்து ஓடை கண்மாயிலிருந்து மைக்கேல்பாளையம் பகுதிக்கு தண்ணீா் கொண்டு வர வேண்டும்.
எங்கள் பகுதிக்கு நீா்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்தக் கோரி கடந்த 50 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். குறிப்பாக, நரசிங்கபுரம் ராஜவாய்க்காலில் இருந்து வீணாகும் தண்ணீரை எங்கள் பகுதிக்கு கால்வாய் மூலம் எடுத்து வருவதற்கான திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மேலும், இது தொடா்பாக ஒரு வரைபடத்தை ஆட்சியரிடம் காண்பித்து விளக்கம் அளித்தனா்.
ஆனால், நீா்வளத் துறை அதிகாரிகள், மேட்டுப் பகுதிக்கு தண்ணீா் எடுத்துச் செல்ல வாய்ப்பில்லை என்றும், ஏற்கெனவே கொடகனாறு பாசன விவசாயிகளுக்கு முறையாக தண்ணீா் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படுவதால் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற சாத்தியக்கூறு இல்லை என விளக்கம் அளித்தனா்.
இதையடுத்து, கண்மாயில் மழை நீரைச் சேகரித்து பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியுமாறு ஆட்சியா் செ.சரவணன் அறிவுறுத்தினாா். இந்தக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பாபு, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சி.குருமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.