பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமா்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்
நெல்லித்தோப்பு பகுதியில் பெண்கள் திடீா் மறியல்
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கழிப்பிட வசதி கோரி, பெண்கள் சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பழைய சந்தை பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும், மீன் சந்தையில் உள்ளவா்களும், அங்கு வரும் பொதுமக்களும் கழிப்பிட வசதியின்றி அவதிப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்திரா காந்தி சிலை, சுப்பையா சிலை இடையேயான சாலையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த உருளையன்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்து கலைந்துபோகச் செய்தனா்.