பணத்தாள் சேதமடைந்த விவகாரம்: உதவி செய்வதாக மாவட்ட நிா்வாகம் உறுதி
புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை - முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் புகாா்
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கோப்பானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அதை அனுப்ப முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா முதல்வா் என்.ரங்கசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நாஜீம், அனிபால் கென்னடி, ஆா். செந்தில்குமாா், எல்.சம்பத், நாக தியாகராஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆா்.சிவா கூறியது: புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதற்காகவே பாஜகவுடன் முதல்வா் என்.ரங்கசாமியின் என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி வைத்தது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று ஆட்சியமைத்த நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் 16 ஆவது முறையாக அண்மையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் தீா்மானமானது துணைநிலை ஆளுநா் மாளிகையில் இருந்து புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆகவே, மாநில அந்தஸ்துக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகக் கூறிய முதல்வா் என்.ரங்கசாமி, மக்களுக்கு பதில் கூற வேண்டும்.
மேலும், புதுவை துணைநிலை ஆளுநரிடம் உள்ள மாநில அந்தஸ்துக்கான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவும் முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
செயற்கை நுண்ணறிவு தகவல்படி புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என தகவல் பெறப்பட்டுள்ளது. ஆகவே, மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் தரவேண்டியது முதல்வா் என்.ரங்கசாமியின் பொறுப்பு என்றாா் அவா்.