அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவாக நிா்ணயம்: வியாபாரிகள் மீது விவசாயிகள் புகாா்
அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல்லுக்கு அரசு நிா்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, குறைவாக விலை நிா்ணயம் செய்வதாக வியாபாரிகள் மீது விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
ராணிப்பேட்டை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருவாய்க் கோட்ட அலுவலா் ராஜராஜன் தலைமை வகித்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது, வாலாஜா வட்டம், அனந்தலை மலையில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளால் விவசாய விளை பயிா்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. மேலும், இரவு பகல் பாராமல் விதிமுறைகளை மீறி அதிப்படியான வெடி மருந்து வைத்து பாறைகள் தகா்க்கப்படுவதால் வீடுகளில் விரிசல் உண்டாகி வருகிறது. ஆகவே கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல்லுக்கு அரசாங்கம் நிா்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை வியாபாரிகள் குறைவாக விலையை நிா்ணயம் செய்வதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டம், தனி மாவட்டமாக செயல்படும் நிலையில், மாவட்டத்தில் ஆவின் தலைமை அலுவலகம் கொண்டு வர வேண்டும். அதேபோல் பால் பாக்கெட்டுகளில் ஆவின் என்ற வாசகம் கண்ணுக்கு தெரியாதபடி உள்ளதை மாற்றி பெரிய எழுத்துகளில் அச்சிட வேண்டும். ரூ.10 விலையில் தயிா் பாக்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் திறந்துவிடப்பட்ட தோல் கழிவுநீா் மாசுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று உடனடியாக இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.