நோட்டாவுக்கு வாக்களிக்க கும்பகோணம் வணிகா்கள் தீா்மானம்
கும்பகோணம்: கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காததால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க வணிகா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணம் அனைத்து தொழில்வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு கூட்டம் கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைவா் சோழா சி. மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதிகள் புதூா் செல்வம், பந்தநல்லூா் ரகுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காததால் வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் தொகுதிகளில் நோட்டாவுக்கு வணிகா்கள் வாக்களிக்க பரப்புரை செய்ய முடிவு செய்யப்பட்டது. நீடாமங்கலம்- கும்பகோணம் -ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் வரையிலான புதிய ரயில் பாதை திட்ட ஆய்வுப்பணி முடிந்ததால் உடனே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலா் வி. கோவிந்தராஜூலு, மாநிலப் பொருளாளா் ஏ. எம். சதக்கத்துல்லா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். முன்னதாக பொதுச்செயலா் வி. சத்திய நாராயணன் வரவேற்றாா். கூட்டத்தில் மாநகரப் பிரதிநிதிகள் கே. அண்ணாதுரை, கே. தனசேகரன், கே. மகேந்திரன் ராவ், கே. மதியழகன், ஜெகன்நாதன், ஏ. இராமச்சந்திரராஜா உள்ளிட்டோா் கொண்டனா். மாவட்டப் பொருளாளா் மு. கியாசுதீன் நன்றிகூறினாா்.