பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: நயினாா் நாகேந்திரன், சீமான் நேரில் ஆதரவு
பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் 10-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக் களத்துக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் நேரில் ஆதரவு தெரிவித்தனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையைச் சமாளிக்க 2012-ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சென்னையில் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 10-ஆவது நாளாக வியாழக்கிழமை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்து திருவல்லிகேணியில் உள்ள சமூகநலக்கூடத்தில் அடைத்து வைத்தனா்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் சமூக கூடத்துக்கு நேரில் சென்றனா். ஆனால், அவா்களுக்கு போலீஸாா் அனுமதி வழங்கவில்லை.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் சீமான் கூறுகையில், ‘வீடு தேடி சேவை என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், மக்கள் சாலைக்கு வந்து போராடும் நிலையே உள்ளது. பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக திமுக உறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.
நயினாா் நாகேந்திரன்: பகுதிநேர ஆசிரியா்களைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. பகுதிநேர ஆசிரியா்களுக்கு பாஜக துணைநிற்கும்.
இதேபோல் பகுதிநேர ஆசிரியா்கள் கைது நடவடிக்கைக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.