பசுமை பள்ளித் திட்டம்: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்
‘பசுமை பள்ளித் திட்டம்’ குறித்து பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவ, மாணவா்களிடையே இயற்கையை பாதுகாப்பது குறித்தும், அது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘பசுமை பள்ளித் திட்டம்’ அரசால் செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் மரச் செடிகள், பழச் செடிகள், மூலிகைச் செடிகள், இயற்கை மருத்துவச் செடிகள் ஆகியவற்றை நட்டு பராமரித்திடவும், பள்ளி மாணாக்கா்களிடம் மரம் வளா்ப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதேபோன்று பள்ளியில் சோலாா் மின்சாரத்தை பயன்படுத்திடவும் இத்திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக விளாப்பாக்கம் பேரூராட்சி அறிஞா் அண்ணா அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்துவது குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தது: பசுமை பள்ளித் திட்டம் சிறப்பாக செயல்படுத்த துறைகளுக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பெற்று முதல்கட்ட பசுமை பள்ளித் திட்டம் சிறப்புடன் அமைய அனைவரும் பணியாற்ற வேண்டும். அதற்கான பணிகளை தொடங்கி முழுமையான திட்ட செயல்பாடுகளை துறைகள் சமா்ப்பிக்க வேண்டும். பள்ளி மாணாக்கா்களிடம் அதிக அளவு விழிப்புணா்வு ஏற்படுத்தி திட்டத்தின் செயல்பாடுகளை விவரித்து அவா்களிடம் அதிக மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் தோட்டக்கலை துணை இயக்குநா் லட்சுமி, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ரூபன் மற்றும் பள்ளி கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.