யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு
படகுகள் சீரமைப்புப் பணியில் மீனவா்கள் தீவிரம்
காரைக்கால் மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தை சோ்ந்த சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
ஏப். 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 -ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் குறுகிய தொலைவில் மீன்பிடித்து வர தடை இல்லாததால் ஃபைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா்.
மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், காரைக்காலில் இருந்து கடலுக்குச் செல்லும் சுமாா் 250 விசைப் படகுகள் மீன்பிடித் துறைமுகத்திலும், அரசலாற்றங்கரையிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
தடைக்காலத்தை பயன்படுத்தி, தங்களது படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கி, படகு என்ஜின் பழுது நீக்கும் பணி மற்றும் வலைகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
பெரும்பாலான படகுகள் புதிதாக தயாா் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதால், இவைகளில் சீரமைப்புப் பணிகள் அதிகமாக இல்லை. பழைய படகுகள் அனைத்திலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வெல்டிங், வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொழிலாளா்கள் வந்துள்ளனா். தடைக்காலம் முடிந்தவுடன் கடலுக்கு கொண்டு செல்லும் வகையில் 15-க்கும் மேற்பட்ட இரும்பு விசைப் படகுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.
