சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்
``படிக்க, வேலையில் சேர உதவிய முதல்வர்... திருமணத்திற்கும் வாழ்த்தியுள்ளார்'' - மணப்பெண் நெகிழ்ச்சி
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமானிய குடும்பத்து பெண்ணின் திருமணத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து அனுப்பி வைத்த சம்பவம், மணமக்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருவேடகத்தை சேர்ந்த மனோகரன்-முருகேஸ்வரியின் மகள் சோபனா. தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் சோபனாவுக்கு, வீரமணி கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்தது.

மதுரை பூங்கா முருகன் கோயிலில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்திய அமைச்சர் பி.மூர்த்தி, கூடவே முதலமைச்சர் அனுப்பி வைத்த வாழ்த்து மடலை மணமக்களிடம் வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அமைச்சர் மூர்த்தி வருகை, முதலமைச்சர் வாழ்த்து என ஆச்சரியங்களுடன் நடைபெற்ற இத்திருமணம் குறித்து விசாரித்தபோது, "திருவேடகத்தைச் சேர்ந்த மனோகரன் - முருகேஸ்வரி தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சோபனா பிளஸ் டூ முடித்தவுடன் அரசு கலைக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு பொருளாதார சூழல் இல்லை. அவர்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில், தன் உயர் கல்விக் கனவை நனவாக்க தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அது முதலமைச்சரின் கவனத்துக்கு உடனே சென்று அவர் உத்தரவில் மதுரையிலுள்ள அரசு கல்லூரியில் சோபனாவுக்கு உடனே இடம் ஒதுக்கப்பட்டது. அவர் படித்துக்கொண்டிருந்தபோது மதுரைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோபனாவின் குடும்பத்தினரை அழைத்துப் பேசி, அவரின் படிப்புக்குத் தேவையான நூல்களை வழங்கி வாழ்த்தினார்.

கல்லூரிப் படிப்பு முடித்ததும் மதுரை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வரும் சோபானாவிற்கு திருமணம் நிச்சயமானதைத் தொடர்ந்து சோபனாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு வர வேண்டுமென்று முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்கள்.
இந்நிலையில்தான் சோபனா - வீரமணி கார்த்திக் தம்பதியினரின் திருமணத்தை நினைவில் வைத்து அமைச்சர் மூர்த்தி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணமகள் சோபனா, "நான் கல்லூரியில் படிப்பதற்கு உதவி செய்து, வேலையில் சேரவும் வழிகாட்டிய முதலமைச்சர், இப்போது என் திருமணத்திற்கும் வாழ்த்து செய்தியை அமைச்சர் மூலம் கொடுத்து அனுப்பியது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
