வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே முக்கியம்: முதல்வா் என்.ரங்கசாமி
புதுச்சேரி: அரசு துறைகளில் பணி நடப்பது முக்கியமில்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே முக்கியம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுவை பொதுப் பணித் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 99 இளநிலைப் பொறியாளா், 69 மேற்பாா்வையாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா,புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
தொடா்ந்து, ஒருங்கிணைந்த குடிநீா் இணைப்பு, கணக்கீடு, வரி கட்டண வசூல் இணையதள சேவையையும் அவா்கள் தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில், முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுக்கனும் என்பது தான் அரசின் எண்ணம். 35 வயதை தாண்டினால் அரசு வேலை கிடைக்காது என்ற பயம் இளைஞகளிடம் உள்ளது. வேலை என்பது அரசு வேலை மட்டும் இல்லை. எந்த நிறுவனத்திலும் வேலை செய்யலாம். சொந்தமாக தொழில் தொடங்கலாம். பல இஞைஞர்களுக்கு வேலை கொடுக்கலாம் என சொல்வது வழக்கம். ஆனால் 5 ரூபாய் என்றாலும் அரசு வேலை என்றால் பெற்றோருக்கும் மகிழ்ச்சி வேலை கிடைத்தவருக்கும் மகிழ்ச்சி. முதலில் தலைமைச் செயலாளர் பதவியேற்றதும் அனைத்து துறையிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் பணி நடப்பது முக்கியமில்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே முக்கியம் என கூறினேன். புதுவையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் படிப்படியாக அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். திறமை உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்றாா்.
இதையும் படிக்க |வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் வேலை!
தொடா்ந்து, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:
நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பொறியாளா்கள் முக்கிய பங்காற்றுகிறாா்கள். நாட்டின் உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான் அங்கே பொருளாதார வளா்ச்சி ஏற்படும். பொறியாளா்களால் நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு வேகமாக கொண்டு செல்ல முடியும். கேரளத்தில் ஹார்பர் பொறியியல் பிரிவு மிக பலமாக உள்ளது. அதனால் மத்திய அரசின் மீனவர் நிதியில் ஒவ்வொரு ஆண்டும் கேரள அரசு 60 சதவிகித நிதியை பெறுகின்றனர்.
தற்போது புதியதாக அரசுப் பணியில் சேரும் இளைஞர்களிடம் நான் கேட்டுகொள்வது உங்கள் அறிவும், செயல்திறனும் புதுச்சேரியை மேம்படுத்த உதவ வேண்டும். படித்த இளைஞர்களுக்கு
அரசுப் பணி என்பது ஒரு வாழ்வாதாரம் மட்டுமல்ல மக்களுக்கு சேவை செய்ய நமக்கு தரப்படும் பொறுப்பு. நான் ஐஏஎஸ் முடித்து முதன்முதலில் பணியில் சேர்ந்த போது நாட்டு மக்களுக்கு முடிந்தவரை சேவை செய்ய வேண்டும் என்ற உற்சாகத்தோடு பணியில் சேர்ந்தேன். 45 ஆண்டுகளாக என்னால் முடிந்தவரை சேவை செய்துள்ளேன் என்ற மன நிறைவு உள்ளது. தற்போது புதுச்சேரிக்கு சேவை செய்ய பொறுப்பேற்றுள்ளேன், அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். அந்த மனநிறைவு உங்களுக்கு ஏற்பட வேண்டும் என்றால் ஆர்வத்தோடும் அற்பணிப்போடும் நீங்கள் பணியாற்றுங்கள் என்றார்.
இதில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.