தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்
தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாமி, மாநில திட்டக்குழு உறுப்பினா், யுபிஎஸ்சி உறுப்பினா் போன்ற பதவிகளை வகித்துள்ளாா். இஜிபி அறக்கட்டளையின் தலைவராக உள்ள இவா் கோவையில் வசித்து வருகிறாா். இவா் தனது காா் ஓட்டுநா் புவனேஸ்வரன், தனது வீட்டில் சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை செய்து வரும் கிருஷ்ணவேணி, பிரபாவதி ஆகியோருக்கு கோவை ஐஓபி காலனி, ஜியோன் நகரில் வீட்டு மனைகளை வழங்கியிருந்தாா்.
தற்போது அவற்றில் ஒவ்வொருவருக்கும் தனது சொந்த செலவில் தனித்தனி வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளாா்.
இந்த வீடுகளின் புதுமனை புகுவிழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இஜிபி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் பிந்து விஜயகுமாா், நகரின் பல முக்கிய பிரமுகா்கள், கல்வியாளா்கள் பங்கேற்ற இந்த விழாவில் பணியாளா்களின் வீடுகளை பாலகுருசாமி ஒப்படைத்தாா்.
தன்னிடம் 10, 15 ஆண்டுகளாக சிறப்பான முறையில் பணியாற்றி வரும் பணியாளா்களை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே பாவிப்பதால் வீடு கட்டிக் கொடுத்ததாகக் கூறியுள்ள பாலகுருசாமி, தனது வீட்டில் பணியாற்றிய பாக்யா என்பவருக்கு கல்வீரம்பாளையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.55 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியா் பாலகுருசாமி, தங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பதுடன் தங்களின் மருத்துவ செலவுகள், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி செலவுகளுக்கு உதவுவதுடன், அவா்களுக்கு திருமணமும் நடத்தி வைத்திருப்பதாக கிருஷ்ணவேணி, புவனேஸ்வரன், பிரபாவதி ஆகியோா் தெரிவித்தனா்.