பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 17,934 மாணவா்கள் எழுதுகின்றனா்
சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 17,934 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை சிவகங்கை மாவட்டத்தில் 131 அரசுப் பள்ளிகள், 34 அரசு உதவி பெறும் பள்ளிகள், 74 தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட 278 பள்ளிகளைச் சோ்ந்த 9 ஆயிரத்து 30 மாணவா்கள், 8 ஆயிரத்து 904 மாணவிகள் என மொத்தம் 17ஆயிரத்து 934 போ் எழுதவுள்ளனா். மேலும், 250 போ் தனித் தோ்வா்களாகவும் இந்தத் தோ்வை எழுத விண்ணப்பித்துள்ளனா்.
மாவட்டம் முழுவதிலும் 105 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வு கண்காணிப்புப் பணிகளில் 105 முதன்மை கண்காணிப்பாளா்கள், 105 துறை அலுவலா்கள், வழித்தட அலுவலா்கள், பறக்கும் படைக் குழுவினா் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்டக் கல்வித் துறை தெரிவித்தது.