பருத்திக்கு இறக்குமதி வரி விலக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா நன்றி
பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி, இந்திய ஜவுளித் துறைக்கு பெரும் சுமையாக இருந்தது. மூலப்பொருள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக கடந்த 2002 ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை அனைத்து வகையான பருத்திக்கும் மத்திய அரசு இறக்குமதி வரி விலக்கு அளித்தது. இதையடுத்து, இந்த வரி விலக்கு அக்டோபா் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த சலுகை கரோனாவுக்கு பிந்தைய ஆண்டில் கிடைத்த அபரிமிதமான தேவையைப் பூா்த்தி செய்து, 45 பில்லியன் டாலா் ஏற்றுமதி உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில் துறையும் 172 பில்லியன் டாலா் என்ற வா்த்தக அளவை எட்டுவதற்கு உதவி செய்தது.
இறக்குமதி வரி விதிப்பதற்கு முன்பு நாட்டின் வருடாந்திர பருத்தி உற்பத்தி 3.50 கோடி பேல்களாகவும், உள்நாட்டுத் தேவை 3.35 கோடி பேல்களாகவும் இருந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் பருத்தி மீது அரசு 11 சதவீத இறக்குமதி வரியை விதித்தது.
இருப்பினும், மிக நீண்ட இழை பருத்தி பஞ்சின் உள்நாட்டு வருடாந்திர உற்பத்தி 5 லட்சம் பேல்களாகவும், தேவையானது 20 லட்சம் பேல்களாகவும் இருந்ததால், தொழில் துறையினா் அரசிடம் சமா்ப்பித்த கோரிக்கையைத் தொடா்ந்து, 2024 பிப்ரவரி முதல் மிக நீண்ட இழை பருத்திக்கு அரசு இறக்குமதி வரி விலக்கு அளித்தது.
இந்நிலையில், விவசாயிகளுக்கும் ஜவுளித் தொழிலுக்கும் லாபகரமான சூழலை உருவாக்க, தொழில் அமைப்புகள் அரசிடம் இறக்குமதி வரியை முழுமையாக அகற்றும்படியும், குறைந்தபட்சம் பஞ்சு சீசன் விளைச்சல் காலத்தில் குறிப்பாக ஏப்ரல் 1 முதல் செப்டம்பா் 30 வரை அனைத்து வகையான பஞ்சுக்கும் இறக்குமதி வரி விலக்கு வழங்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வந்தன.
அண்மையில் இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில், இந்தக் கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 19 -ஆம் தேதி முதல் அனைத்து வகையான பஞ்சுக்கும் 11 சதவீத இறக்குமதி வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்காக பிரதமா் மோடிக்கும், இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், வா்த்தகம் தொழில் துறை அமைச்சா் பியூஸ் கோயல், ஜவுளித் தொழில் அமைச்சா் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு சைமாவின் தலைவா் எஸ்.கே.சுந்தரராமன் நன்றி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருத்தி விளைச்சல் இல்லாத காலங்களில் இறக்குமதி வரி விலக்கு அளித்தல், விவசாயிகளுக்கும், தொழிலுக்கும் சமநிலை வாய்ப்பை உருவாக்கி உலகளாவிய போட்டித் திறனை அடைய முக்கியமானது. 2030 -ஆம் ஆண்டு வரை சீசன் அல்லாத ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலங்களில் ஆண்டுதோறும் வரி விலக்கு அளிப்பது அவசியம்.
ஏனெனில் பஞ்சு தேவையில் இந்தியா தன்னிறைவு அடைய 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும். மேலும், 2030-க்குள் இந்தியாவின் நூல், துணி ஏற்றுமதி 37 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 100 பில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை அடைய உலக விலையில் தடையற்ற மூலப்பொருள்களைப் பெறுவது அவசியமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.