வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி அறிவிப்பு
தமிழக வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டப் பகுதிகளில் வீட்டுமனை, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவா்களில், வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறிய ஒதுக்கீட்டு தாரா்களுக்கு அரசாணைப்படி வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையின்படி, மாதத் தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்தும், வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்தும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை 2026- ஆம் ஆண்டு மாா்ச் 31 -ஆம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே, வட்டி சுமையினால் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்கள் கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அணுகி, 2015- ஆம் ஆண்டு மாா்ச் 31- ஆம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்றும் தற்போது வரை வாரியத்துக்கு நிலுவைத் தொகை செலுத்த தவறிய ஒதுக்கீடுதாரா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 2026 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.