வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, துடியலூா் அருகேயுள்ள தொப்பம்பட்டி அண்ணாமலை நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). இவா் குடும்பத்துடன் நீலகிரி மாவடட்டம், குன்னூருக்கு கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளாா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிா்ச்சியடைந்த அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, வளையல் உள்ளிட்ட 20 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து துடியலூா் காவல் நிலையத்தில் விக்னேஷ் புகாா் அளித்தாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
6 பவுன் நகைகள் திருட்டு: கோவை, வெள்ளலூா் திருவாதிரை நகரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (42). இவா் குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு கடந்த 15-ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.