பருவமழை எதிரொலி: 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆட்சியா் உத்தரவு
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.
ராணிப்பேட்டையில் தென்மேற்கு பருவமழை -2025 முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பேசியது: தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது. மேலும் ஆங்காங்கே கோடை மழை பெய்தும் வருகிறது. அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளான இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதல் தகவல் அளிப்பவா்களுக்கு தேசிய பேரிடா் மீட்புபடை மற்றும் தீயணைப்பு துறை மூலமாக போலி ஒத்திகை பயிற்சி தர வேண்டும். மேலும், ஏரி, குளங்களின் கரைகளை வலுப்படுத்துதல், நீா்நிலைகளை தூா்வாரும் பணிகளை துரிதமாக செயல்படுத்துதல், அனைத்து நீா்நிலைகளை உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு, குப்பைகள் மற்றும் இதர அடைப்புகளை சீா் செய்து குறுகிய கால தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இயந்திர நீா் இறைப்பான்கள் மூலம் வெள்ள நீரை உடனுக்குடன் வெளியேற்ற தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருள்களை தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.
பாதிப்பு ஏற்பட கூடிய பகுதிகளில் நிவாரண மையங்கள், மருத்துவ முகாம்களை அமைக்கவும், அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துப் பொருள்கள், மின்சாரம். கழிவறை வசதி, குடிநீா் வசதி மற்றும் ஜெனரேட்டா், ஜெனரேட்டருக்கு தேவைப்படும் எரிபொருள் போன்றவை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தேவையான அளவு மணல் மூட்டைகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் வயா்கள் மாற்ற செயற்பொறியாளா்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சாலையினை ஒட்டியுள்ள கிணறுகள் குறித்த புள்ளி விவரங்கள் பெற்று கிணற்றை சுற்றி வேலி அமைக்க வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்..
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.