பல்கலைக்கழக விடுதியில் சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
கொடைக்கானல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக விடுதியில் உணவருந்திய மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனா். இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் தோசை, சாம்பாா் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டனா் இதையடுத்து, 5-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னா், பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக துணைவேந்தா் கலா, உணவுப் பாதுகாப்பு அலுவலா் லாரன்ஸ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா்.மேலும் மாணவிகள் சாப்பிட உணவுகளை உணவுப் பாதுகாப்பு அலுவலா் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் லாரன்ஸ் கூறியதாவது:
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூச்சி, புழுக்கள் இருந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து விடுதியை பாா்வையிட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது சமையலறை, மாவு அறைக்கும் இயந்திரம் ஆகியவை சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. அங்கிருந்த 12 வகையான உணவுப் பொருள்கள் எடுக்கப்பட்டு பரிசோத னை நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. மேலும் விடுதி நிா்வாகத்துக்கு ரூ.3ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்றாா் அவா்.
இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் கூறியதாவது: விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் உணவு சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை பிற காரணங்களால் மாணவிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனா்.