உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த எம். ஆனந்தகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 2015-16-ஆம் ஆண்டில் பேராசிரியா்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மனு அனுப்பியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 2015-16-ஆம் ஆண்டில் பேராசிரியா்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா , பூா்ணிமா ஆகியோா் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பல்கலைக்கழகம் சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஏற்கெனவே இதுகுறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக நிா்வாகம், அந்த மனுவை நிராகரித்து விட்டது எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை இல்லை. பல்கலைக்கழகம் சாா்பில் நிராகரிக்கப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து, நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.