ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
பள்ளி, கல்லூரி மாணவா்கள் அங்கக வேளாண்மை கல்விச் சுற்றுலா
திருவாரூரில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் அங்கக வேளாண்மை குறித்து அறிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரு நாள் கல்விச் சுற்றுலா செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.
திருவாரூா் வட்டாரத்தில், வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அங்கக வேளாண்மை மற்றும் வேளாண் இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ஒருநாள் கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது. இதில், திருநெய்ப்போ் மற்றும் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட கல்விச் சுற்றுலா பயணத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாணவ- மாணவிகள் குடவாசல் தயானந்தா அறக்கட்டளையில் உள்ள இயற்கைவழி வேளாண் பண்ணைக்குச் சென்று, அங்கக வேளாண்மை மற்றும் வேளாண் இடுபொருள்கள் தயாரிப்பது குறித்து விளக்கம் பெற்றனா்.
தொடக்க நிகழ்வில், திருவாரூா் வேளாண்மை இணை இயக்குநா் தி. பாலசரஸ்வதி, துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், வேளாண்மை துணை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான கோ. ஜெயசீலன், வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சு. பிரபாவதி, திட்ட ஒருங்கிணைப்பாளா் செ. ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.