அதிமுக ஆட்சியின் சாதனைகளை பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?: முதல்வா் ஸ்டாலினுக்க...
பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!
திருவாரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் இருந்தது தொடர்பாக, 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் ஊராட்சி காரியாங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு காலை உணவு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கார்த்திகா, இன்று(ஜூலை 14) காலை வழக்கம்போல், பள்ளிக்கு சென்றார். அப்போது சமையல் கூடத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருள்கள் திருடு போயிருந்தன.
தண்ணீர் தொட்டியில் மலம்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பள்ளி விடுமுறை தினமான (ஜூலை 13) ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளிக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து, சமையல் கூடத்தை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, மளிகைப் பொருள்களை திருடியுள்ளனர்.
மேலும், கழிவறையை பயன்படுத்திய அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர், குழாயில் தண்ணீர் வராததால், ஆத்திரம் அடைந்து பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் குழாய்களை உடைத்து, குடிநீர் தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்ததும் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்ற தடயவியல் நிபுணர்கள், அங்கு கிடைத்த அனைத்து ஆதாரங்களை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். திருவாரூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி
பள்ளியில் நடந்த விரும்பத்தகாத செயல் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக நிகழ்விடத்திற்குச் சென்று அனைத்து இடங்களை ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார். பள்ளிக்குள் புகுந்து தகாத செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கூறினார்.
3 பேரிடம் விசாரணை
திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 3 பேரை பிடித்து தாலுகா போலீஸார் விசாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக! பிரேமலதா சுற்றுப்பயணம்!