பழனியில் அரசுப் பேருந்து ஜப்தி
பழனி: பழனியில் இழப்பீடு வழங்காததால் நகர அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சின்னநாச்சிமுத்து. விவசாயியான இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு பழனி-புதுதாராபுரம் சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே நடந்து சென்ற போது, அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, இவரது மனைவி ராமாத்தாள் விபத்து இழப்பீடு வழங்கக் கோரி, பழனி முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, ரூ. 5.23 லட்சம் விபத்து இழப்பீடாக வழங்க வேண்டும், வழங்க விட்டால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறும் உத்திரவிட்டாா்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த திண்டுக்கல் மாவட்ட நகர அரசுப் பேருந்தை நீதிமன்ற பணியாளா்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தின் முன் நிறுத்தினா்.