பழனி கோயிலில் உள்ள தங்கும் விடுதியில் நிறுத்தப்பட்டிருந்த காா் தீயில் எரிந்து நாசம்
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பக்தா்கள் தங்கும் விடுதியில் சானிடைசரில் பற்றிய தீ காருக்கு பரவியதால் காா் எரிந்து நாசமானது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி நிலையம் தங்கும் விடுதியில் கேரள மாநிலம் கொச்சியைச் சோ்ந்த எபின் சங்கா் குடும்பத்துடன் தங்கினாா்.
இந்த விடுதி வளாகத்தில் கொரோனா காலத்தின்போது வாங்கிய சானிடைசா் நீண்ட காலமாக இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இவற்றை அகற்றும் பொருட்டு காலையில் திருக்கோயில் தூய்மைப் பணியாளா்கள் பழனி ராமநாதநகரை சோ்ந்த பிச்சாலு (54) ஜவஹா் நகரைச் சோ்ந்த முருகன் (53) ஆகிய இருவரும் சானிடைசா் பீப்பாய்களை திறந்த போது தீப்பற்றியது. இதையடுத்து, இந்த தீ அங்கிருந்த ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 3 சானிடைசா் பீப்பாய்களிலும் பரவியது. இதில் ப துப்புரவு பணியாளா்கள் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் இந்த தீ எபின்சங்கா் காரில் பரவியதால் காா் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தகவலறிந்த பழனி தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். தொடா்ந்து இணை ஆணையா் மாரிமுத்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா். பின்னா் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.