பழிவாங்குமா கதண்டுகள்; ஏன் கடிக்கின்றன; கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? | InDepth
'கதண்டு கடித்து பலி' என்கிற செய்தி அடிக்கடி நம் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னால்கூட திருநெல்வேலியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கதண்டு கடித்து உயிரிழந்துவிட்டான். கதண்டு பற்றியும், அதன் இயல்புபற்றியும் இயற்கை ஆய்வாளர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கோவை சதாசிவம் பகிர்கிறார். கதண்டு கடித்தால் ஏன் உயிரிழப்பு வரை ஏற்படுகிறது; அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டுமென சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா சொல்கிறார்.

''கதண்டு என்பது ஒருவகையான குளவி தான். மஞ்சள் நிறக்குளவி. இவை கூடுகட்டி கூட்டமாக வாழ்பவை. ஆங்கிலத்தில் Yellow jacketed sting என்போம். கதண்டை ஆட்கொல்லி வண்டாகவே மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். காரணம், கடிவாங்கியவர்களின் அச்சம் தருகிற பேச்சுதான்.
கதண்டுகளின் இருப்பிடம் காடுகள்தான். கதண்டுகள் மனிதர்களுக்கு அருகில் வாழ விரும்பாத குளவி. எங்காவது உயரமான மரங்களில், பாறை இடுக்குகளில்தான் கூட்டமாக வாழும். காய்ந்து மட்கின மரங்களை, காய்ந்த இலைகளை, சுள்ளிகளை, இன்னும் சில கரிமப்பொருள்களை சேகரித்து தன் உமிழ்நீரால் கூழாக்கி மரக்கிளைகளில் ஒட்ட வைத்து கூடு கட்டி விடும். கதண்டின் உணவு கம்பளிப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகள்தான். கிடைக்கவில்லையென்றால், தேனீக்களையும் கொன்று தின்றுவிடும். முட்டையிட்டு, குஞ்சுகளுக்கு தான் உண்கிற பூச்சிகளை மென்று கூழாக்கி ஊட்டி விடும்.

நான் காடுகளுக்குள் பயணிக்கையில், உடன் வருபவர்களிடம் பூச்சிகளை, வண்டுகளை கொன்றுவிடாதீர்கள் என்பேன். காரணம், ஒன்றைக்கொன்றால், அதன் வாடை காற்றில் கலந்து பலநூறு வந்துவிடும் என்கிற அச்சம்தான்.
இன்றைக்கு காடு அழிப்பு அதிகரித்துவிட்டது. அதனால், வேறு வழியில்லாத கதண்டுகள் உயரமான தென்னை மற்றும் பனை மரங்களில் கூடு கட்ட ஆரம்பித்துவிட்டன. கைவிடப்பட்ட கட்டடங்களிலும் கூடு கட்டுகின்றன.
கதண்டோ, அல்லது வேறொரு வகை குளவியோ நம் தோட்டத்திலோ, வீட்டில் உள்ள மரத்திலோ கூடு கட்டியிருந்தால், அதை மிக கவனமாகத்தான் அழிக்க வேண்டும். காரணம், ஒரு குளவியை நாம் நசுக்கிக் கொன்றால், அதன் உடலில் இருந்து வெளிவருகிற திரவம் சகிக்க முடியாத துர்வாடையுடன் காற்றில் கலக்கும். அதை நுகர்ந்த மற்ற கதண்டுகள் 'நம்மைச் சேர்ந்தவரை யாரோ கொன்றிருக்கிறார்கள்' என்பதை உணர்ந்துகொண்டு, அந்த துர்வாடையைப் பிடித்தபடி அடித்துக்கொன்ற இடத்துக்கு வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதனால், எந்த வகை குளவி உங்களைச் சுற்றிய பகுதிகளில் கூடு கட்டியிருந்தாலும் தீயணைப்புத்துறையினரை அணுகி அதை அப்புறப்படுத்துவதே பாதுகாப்பு.

சிலர் தேனீயும் கதண்டும் ஒன்று என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல.
இரண்டுக்கும் கொடுக்கு இருக்கிறது என்றாலும், கதண்டுக்கு இன்னும் நீளமான, தடித்த, மிகவும் கூர்மையான கொடுக்கு இருக்கிறது. தேனீ மனிதனைக் கொட்டினால், அதன் கொடுக்கு வாயுடன் சேர்ந்து முறிந்து விடும். இதனால், அந்த தேனீக்கள் தற்கொலை செய்துகொள்ளும். ஆனால், கதண்டுகளின் கொடுக்கு உடையாது. இதனால், ஒரே மனிதரை பலமுறை கதண்டால் கடிக்க முடியும். இதனால், அதன் உடலில் இருக்கிற ரசாயனம் நம் உடலுக்குள் கூடுதலாக சென்றுவிடும். சிலருக்கு கடிபட்ட இடத்தில் வீக்கம், சிவந்துபோதல் என்பதோடு நின்றுவிடலாம். சிலருக்கு, அந்த ரசாயனங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.''
''கதண்டின் கொடுக்கில் மாஸ்டோபேரான் (MASTOPARAN) மற்றும் பாஸ்போலைப்பேஸ் ஏ 1 ( PHOSPHOLIPASE A 1) ஆகிய விஷப்பொருட்கள் உள்ளன. கதண்டுக் குளவி கொட்டும் போது இந்த விஷத்தை நமது தோலுக்குள் செலுத்தி விடுகிறது. குறிப்பிட்ட இந்த பொருட்களுக்கு நமது உடலில் ஒவ்வாமை இல்லாவிடில் கடித்த இடத்தில் சிவப்பாக மாறும், வீக்கம் தோன்றும், நன்றாக வலிக்கும், பிறகு சில மணிநேரங்களில் வலி குறையும், சில நாட்களில் வீக்கம் குறைந்து குணமாகும்.
ஆனால், மாஸ்டோபேரான் (MASTOPARAN) மற்றும் பாஸ்போலைப்பேஸ் ஏ 1 ( PHOSPHOLIPASE A 1) ஆகிய இரண்டுக்கும் நம் உடலில் ஒவ்வாமை இருந்தால் நமது உடலில் அனாஃபிலாக்சிஸ் எனும் தீவிர ஒவ்வாமை நிகழ்வு ஏற்படும். இந்தப் பிரச்னையை பொறுத்தவரை வருவதற்கு முன் கண்டுபிடிக்க முடியாது. இந்த ஒவ்வாமை ஏற்பட்டால், மூச்சுக்குழாய் மற்றும் சுவாசப்பாதை திடீரென சுருங்கிக் கொள்ளும். இதனால் கடும் மூச்சுத் திணறல், இருமல், விழுங்குவதில் சிரமம், வியர்த்தல், தலை சுற்றல், ரத்த அழுத்தம் குறைந்து போதல், குமட்டல், வாந்தி, கவனிக்காமல்விட்டால் மரணம் சம்பவிக்கும்.
அனாஃபிலாக்சிஸ் நேரும் போது உடனடியாக அதற்குரிய மாற்று மருந்தாக இருக்கும் அட்ரினலின்/ எப்பிநெப்ரின் மருந்தை அடுத்த சில நொடிகளில் செலுத்தினால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

முதலில் கடித்த இடத்தில் உள்ள கொடுக்கைப் பிடுங்கி எரிய வேண்டும். அடுத்து கடித்த இடத்தை நன்றாக சோப் போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். பிறகு கடித்த இடத்தில் ஐஸ் கட்டி வைத்து அழுத்தலாம். உடனே மருத்துவரைப் பார்த்துவிட வேண்டும்.
ஒருவேளை கதண்டு கடித்தவுடன் அந்த நபருக்கு மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம்,
நெஞ்சு மற்றும் தொண்டைப் பகுதியில் நெரிப்பது போலத் தோன்றினால, உடனே 108 க்கு கால் செய்ய வேண்டும். அல்லது உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
ஒருவேளை மருத்துவமனை அருகில் இல்லாத நிலையில் கடிபட்டவர் மூச்சுப் பேச்சு இல்லாமல் சுவாசமும் நாடித் துடிப்புமற்று இருந்தால் உடனே சிபிஆர் முதலுதவி கொடுக்கப்பட வேண்டும். எல்லா கதண்டுக் கடியும் உயிருக்கு ஆபத்தாக முடிவதில்லை. என்றாலும், கதண்டுகள் வாழும் பகுதிகளை விட்டு விலகி இருப்பது நல்லது.''
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...