பவதாரிணியின் கடைசி ஆசை... இளையராஜா வெளியிட்ட அறிவிப்பு!
பவதாரிணியின் நினைவாக சிறுமிகளுக்கான இசைக்குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25 அன்று காலமானார்.
அவரின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்வு நேற்று (பிப். 12) அனுசரிக்கப்பட்டது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினரும் திரைத் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்: இளையராஜா
இதில், பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டு அவர் கடைசியாக இசையமைத்த ’புயலில் ஒரு தோணி’ பட இசை வெளியீடு நடைபெற்றது.
நிகழ்வில் பவதாரிணியின் கடைசி ஆசை குறித்து பகிர்ந்த இளையராஜா பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகளுக்கான இசைக்குழு தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.
”பவதாரிணியின் கடைசி ஆசை சிறுமிகளுக்கான இசைக்குழுவை (ஆர்கெஸ்ட்ரா) உருவாக்குவது. நான் மலேசியாவில் இருந்தபோது மாணவிகள் குழுக்களாக வந்து என்னிடம் பாடிக் காட்டினார்கள். அதைப் பார்த்தவுடன் பவதாரிணி சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. பவதாரிணி பெயரால் பெண்கள் இசைக்குழு ஆரம்பிக்கவுள்ளேன். 15 வயதுக்கு மேற்படாத மாணவிகள் இந்த இசைக்குழுவில் இருப்பார்கள். அவர்களை மட்டும் தேர்வு செய்ய இருக்கிறேன்.
மலேசியாவிலேயே இரு இசைக்குழுக்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். உலகின் எந்த மூலையிலிருந்து மாணவிகள் வந்தாலும் இந்த இசைக்குழுவில் சேரலாம். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இந்த இசைக்குழு பவதாரிணியின் நினைவாக உலகம் முழுவதும் பரவும்” என்று இளையராஹாதெரிவித்தார்.