பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது யார்?
பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆதில் உசேன் தோக்கர் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஸ்ரீநகர் அருகே குர்ரே கிராமத்தைச் சேர்ந்த ஆதில் உசேன் தோக்கர், 2018 ஆம் ஆண்டில் மாணவர் விசா மூலம் பாகிஸ்தானுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்து, ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் சென்றவுடன், குடும்பத்தினருடனான தொடர்பைத் துண்டித்ததாகவும், இவர் பாகிஸ்தான் செல்வதற்கு முன்னர் இருந்தே தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
2018 முதல் பாகிஸ்தானில் இருந்த நிலையில், 2024-ல் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்டார். இதற்காக, அவருடன் சேர்ந்து ஒரு குழுவாக, கரடுமுரடான மலைப்பகுதியான பூஞ்ச்-ரஜோரி பகுதியிலிருந்து மூசா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட அனந்த்நாக் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகள், தாக்குதல் குறித்து திட்டம் தீட்டி வந்துள்ளனர். இந்த நிலையில்தான், சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படுவது அறிந்து, பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலையடுத்து, பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாகக் கூறி, வெடிவைத்து தகர்க்கப்பட்ட வீட்டில் வெடிபொருள்கள் இருந்ததாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!