`பாக்கியலட்சுமி' இனியாவின் டான்ஸ்... உருகிய ரீல் அம்மா.. கடுப்பில் ரியல் அம்மா
'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி-பாக்யா தம்பதியின் மகள் இனியாவாக நடித்து வரும் நேகாவின் டான்ஸ் போட்டி கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலத்த ட்ரோலுக்கு ஆளாகியிருப்பதில் ரொம்பவே நொந்து போயிருக்கிறார் அவர். பரதநாட்டிய உடையில் 'புஷ்பா' படத்தில் வரும் ஃபீலிங்ஸ் பாடலுக்கு அவர் போட்ட ஆட்டத்தைப் பார்த்து அவரது அப்பா கோபி யெஸ், யெஸ் என உற்சாகத்துடன் கைதட்ட அவரது அம்மா பாக்யாவோ உருகிப் போய் மகளின் ஆட்டத்தைப் பார்ப்பார்.
ஆனால் சோஷியல் மீடியாவில் பலரும் கலாய்த்து வரும் நிலையில் நேகாவிடம் பேச முயன்றோம். அவருடைய அம்மா பிரசன்னாதான் லைனில் வந்தார். ரீல் அம்மா மகளின் நடனம் பார்த்து உருகிய நிலையில் நேகாவின் ரியல் அம்மாவோ மகளைக் கலாய்ப்பது பார்த்து கடுப்பிலிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/1ojx8ur5/2.png)
''குழந்தையில இருந்தே நடிச்சிட்டு வர்றா. ஒரு சீரியல் காட்சியில நடிச்சுட்டு வந்து அவ இவ்வளவு ஃபீல் பண்ணி நான் பார்த்ததே இல்லைங்க. சமூக ஊடகங்கள்ல பேசறதுக்கு வேற விஷயமே இல்லையாங்க? எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு. அதுக்கு சொல்யூசன் தேடலாம். அதை விட்டுட்டு ஒரு சீரியல் காட்சிக்கு இப்படி நேரம் செலவழிச்சு பேசிட்டிருக்காங்களேனு நினைக்கத் தோணுது.
ரசிச்சாக் கூடப் பரவால்லங்க. காமெடி நடிகர் நடிகைகள் மத்தவங்களைச் சிரிக்க வைககறதுக்காக தங்களையே கலாய்ச்சிக்கிடறதையெல்லாம் பாக்குறோமே. ஆனா அந்த மாதிரிக்கூட இருக்காம கலாய்க்கிறோம்கிற பேர்வழியில எல்லை மீறி பேசிட்டிருக்காங்க. அவ சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் கொழூகொழுன்னு இருப்பா.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-09-06/c9i1o23z/baaki2%20(1).png)
அதனால இந்த மாதிரி கலாய், கேலிகளை அப்பவே நிறைய எதிர்கொண்டிருக்கா. பள்ளிக்கூட நாள்கள்ல பசங்க ஒருத்தருக்கொருத்தர் இந்த மாதிரி கேலி பேசிக்கிட்டா அதைக்கூட பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை. ஆனா இப்ப வர்ற கமெண்டுகளை உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சோம்னா, மன அழுத்தத்துக்கு ஆளாகிடுவோமோனு தோணுது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/txtswgv7/1.png)
இந்த இடத்துல இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாகணும். எந்த நடனதுக்கு என்ன காஸ்ட்யூம் போடணும்கிற அறிவெல்லாம் எங்களுக்கு இருக்கு. ஆனா சீரியல்ல நடிக்கனும் போன பிறகு அவங்க சொல்ற காஸ்ட்யூமைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்குது. சீரியல் தயாரிப்பாளர்களும் சேனலும் என்ன நினைக்கிறாங்க்னு எங்களுக்குத் தெரியலைங்க.
இந்த மாதிரி காட்டினாதான் சீரியலுக்கு ரேட்டிங் கிடைக்குதுன்னு நினைக்கிறாங்களானும் தெரியலை. அவங்ககிட்ட போய் நான் இப்படி உடை உடுத்திட்டு நடிக்க மாட்டேனு சொல்ல முடியலை. சீரியலே சீக்கிரத்துல முடியப் போகுதுனு சொல்றாங்க. எதையாவது கேட்டு, முடியப்போற நேரத்துல எதுக்கு ஒருத்தருக்கொருத்தர் சங்கடம்னுதான் என்ன சொல்றாங்களோ அப்படியே கேட்டுட்டுப் போவோம்னு சொல்லிட்டா என் மக. ஆனா அவ இந்த ட்ரோல்களால் ரொம்பவே அப்செட் ஆகியிருக்காங்கிறது மட்டும் நிஜம்'' என்கிறார் இவர்.