பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
கதாநாயகன், கதாநாயகி இல்லாமல் எடுக்கப்பட்ட அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ள மகாவதாரம் நரசிம்மாவின் வசூல் நிலவரத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
2025 ஆம் ஆண்டில் இந்தியா சினிமாவில் குறிப்பிடத்தக்க வகையில் பல நல்ல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளிலும் வெளியாகியுள்ளன.
அதில், பிளாக் பஸ்டர் படங்களாக விக்கி கௌசலின் சாவா, ஆமிர் கானின் சித்தாரே ஜமீன் பார் மற்றும் சமீபத்தில் வெளியான சையாரா ஆகிய படங்களும் நல்ல வசூலை ஈட்டி தயாரிப்பாளருக்கு நல்ல வருவாயை தந்துள்ளன.
இதற்கு மத்தியில்தான், 2 மணி நேரம் 10 நிமிடங்கள் கொண்ட கதாநாயகன், கதாநாயகி யாரும் இல்லாமல் அனிமேஷனில் தயாரிக்கப்பட்டுள்ள மகாவதாரம் நரசிம்மா என்ற திரைப்படம் வெறும் ரூ.4 கோடியில் உருவாக்கப்பட்டது. அனிமேஷன் படமான மகாவதாரம் நரசிம்மா சாதாரண படங்களுக்குப் போட்டியாக திரையரங்கில் சக்கைப் போடு போட்டுள்ளது.
கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் குறைந்த செலவில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதில் தனித்துவம் பெற்றது.
இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இரண்ய கசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன், விஷ்ணுவை மையமாக வைத்து புராண திரைப்படமாக மகாவதாரம் நரசிம்மா உருவாகியிருக்கிறது. ஜூலை 25 ஆம் தேதி வெளியான இந்தப் படம் கடந்த 5 நாள்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது.
முதல் நாளில் ரூ. 1.75 கோடியும், 2-வது நாளில் ரூ. 4.6 கோடியும், 3-வது நாளில் ரூ. 9.5 கோடியும், நான்காவது நாளில் ரூ. 6 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ. 7.7 கோடியும் வசூலித்துள்ளது. இந்தப் படம் இந்தியாவில் மொத்தமாக ரூ. 29.55 கோடி வசூலித்துள்ளது.