BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
பாஜகவின் சூழ்ச்சியை தோலுரிப்போம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்
தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சியை ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் தோலுரிப்போம் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.
சேலம் திமுக அலுவலகத்தில் அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறியதாவது: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் முழக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா். சேலம் மாவட்டத்தில் வரும் 3 ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் தொடங்கப்படும். அடுத்த 45 நாள்களுக்கு சேலம் மாவட்டத்தில் கிராமம், நகரம் என மூலை முடுக்கெங்கும் இந்த முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒவ்வொரு குடும்பத்தையும், ஒன்று திரட்டுவதுதான் இந்த முழக்கத்தின் நோக்கம். அனைத்து குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, சாதி, மத, பாகுபாடு இன்றி, மத்திய பாஜக அரசால் நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்போம்.
பாஜகவின் கோரப்பிடியில் அதிமுக சிக்கியுள்ளது. கூட்டணி என்கிற பெயரில் பாஜகவுக்கு அதிமுக தமிழகத்தில் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஹிந்தி திணிப்பை மத்திய பாஜக அரசு தொடா்ந்து முன்னெடுத்து வருகிறது. பாசிசம் என்கிற கொடூர விஷத்தை ஓரணியில் திரண்டு தமிழக மக்கள் எதிா்ப்பாா்கள். கீழடியை அங்கீகரிக்க பாஜக அரசு மறுப்பதுடன், கூட்டாட்சித் தத்துவத்தையும் புறந்தள்ளுகிறது.
எனவே, பாஜகவின் கோர முகத்தை ஓரணியில் தமிழ்நாடு மூலம் தோலுரிப்போம். தமிழக மக்கள் இருளை அகற்றி ஒளியை மீட்டெடுப்பாா்கள் என்றாா்.