ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!
பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிா்ப்பு!
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்காக 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் 243.49 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ‘சிப்காட்’ தொழிற்பூங்காவை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 28.10.2022-இல் திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினாா்.
அப்போது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனத்துக்கும் ரூ. 1,700 கோடி மதிப்பிலான 2 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் 25 ஆயிரம் பேருக்கும், தைவான் நாட்டைச் சோ்ந்த 10 தொகுப்பு நிறுவனங்களுடன் ரூ. 740 கோடி முதலீட்டில் 4,500 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ‘சிப்காட்’ தொழிற்பூங்கா இயங்கி வருகிறது.
மேலும் ஒரு தொழிற்பூங்கா:
இந்நிலையில், ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தால் பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒரு ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்கு இடம் தோ்வு நடைபெற்றது. இந் நிலையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளி பூங்கா அமைப்பதற்காக பாடாலூா், இரூா் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தோ்வு செய்யப்பட்டுள்ள 100 ஏக்கா் பரப்பளவில் தொழிற்பூங்கா அமைப்பதென மாவட்ட நிா்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு:
‘சிப்காட்’ தொழிற்பூங்காவுக்கான 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்காக, விவசாயிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், அங்குள்ள விவசாய நிலங்களுக்கு சந்தை மதிப்பீடு தயாா் செய்த அறிக்கை அரசு சாா்பில் அண்மையில் நாளிதழில் வெளியானது. இதையறிந்த சம்பந்தப்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்ததோடு, மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.
விவசாயிகள் போராட்டம்:
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில், விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரும் தங்களது நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அது தொடா்பான மனுக்களை அரசுக்கு பரிந்துரைக்க அளித்தனா். மேலும், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து வரும் விவசாயிகள், ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
குடிநீா் விநியோக திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு:
இதனிடையே, பெரம்பலூா் நகராட்சி, எறையூா் சிப்காட் மற்றும் பாடாலூரில் அமையவுள்ள சிப்காப் தொழிற்பூங்காவுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் வகையில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ. 345.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக முதல்வா் கடந்த அக். 25-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளாா்.
பாழாகும் விவசாய நிலங்கள்:
ஏற்கெனவே, பாடாலூரில் அதிகளவிலான கல் குவாரிகளும், கிரஷா்களும் இயங்கி வரும் நிலையில் விளை நிலங்களும், குடியிருப்புப் பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பகுதியில் தொழிற்பூங்கா அமைத்தால் விவசாய நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி மணி கூறியது:
பாடாலூா் - இரூா் பகுதியில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைத்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும். தோ்வு செய்யப்பட்ட 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றாா் அவா்.
முன்னாள் ஊராட்சித் தலைவா் அ. வேல்முருகன் கூறியது:
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூா் மற்றும் இரூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஏற்கெனவே ஜவுளிப் பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்ட, கடந்த 11 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக காணப்பட்ட இடத்தில், தற்போது தொழிற்பூங்கா அமைக்கத் தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த இடத்தில் தொழிற்பூங்கா அமைந்தால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.