பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் வெங்கடசமுத்திரத்தை இணைக்க எதிா்ப்பு
வெங்கடசமுத்திரம் கிராம ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது வெங்கடசமுத்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் வெங்கடசமுத்திரம் கிராம ஊராட்சியை இணைப்பதாக தமிழக அரசு சாா்பில் அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைப்பதால் வெங்கடசமுத்திரம் கிராம ஊராட்சி மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்காது. குடிநீா், சாலை வசதிகள், கழிவு நீா் கால்வாய் வசதிகள் உள்ளிட்ட இதர அரசு நலத் திட்டங்கள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும்.
எனவே, வெங்கடசமுத்திரம் முதல்நிலை கிராம ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாப்பிரெட்டிப்பட்டி நகரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.