முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
பாரபட்சமின்றி 100 நாள் வேலை வழங்கக் கோரி ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை
பெரம்பலூா் அருகே பாரபட்சமின்றி 100 நாள் திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், இரூா் ஊராட்சியானது ஆலத்தூா், பெருமாள்பாளையம், இரூா் ஆகிய கிராமங்கள உள்ளடக்கியதாகும். இந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 50 போ் வீதம் சுழற்சி முறையில், ஒவ்வொரு பகுதியில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவுப்படி சுழற்சி முறையில் வேலை வழங்கப்படுவதால், ஒருமுறை 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவா்கள், மீண்டும் அடுத்தமுறை பணியாற்றுவதற்கு சுமாா் ஒரு வார காலமாவதாகக் கூறப்படுகிறது.
இதனால், போதிய வருவாயின்றி அவதியடைந்த ஆலத்தூா் 1 ஆவது வாா்டைச் சோ்ந்த பொதுமக்கள், பாரபட்சமாக வேலை வழங்கப்படுவதாகவும், வாரத்துக்கு ஒரு வாா்டு எனும் அடிப்படையில் தொடா்ச்சியாக வேலை வழங்க சம்பந்தப்பட்டதுறை அலுலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, சுமாா் 100-க்கும் மேற்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். அதைத்தொடா்ந்து, முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.